Saturday, June 16, 2012

எப்படி இருந்த அரவிந்தசாமி...


 மணிரத்னத்தின் ‘ரோஜா’ வந்த புதிதில் பக்கத்து வீட்டு,எதிர்வீட்டு,தெருவில் இருந்த,சொந்தத்தில் இருந்த எல்லா அக்காக்களுக்குப் பிடித்த, நடிகைகளுக்குப் பிடித்த, அப்போதைய ஆன்ட்டிகளுக்குப் பிடித்த ஒருவர் இருந்தார் என்றால் அது அரவிந்தசாமிதான். பொதுவாக அரவிந்த் என்று அழைத்தால்தான் அது மாடர்ன் என்றிருந்த காலத்தில் சாமி சேர்த்தே அழைக்கப்பட்டும் கனவுக்கண்ணன் ஆக கோலோச்சியவர் அ.சாமி.


இவன் கிட்டே அப்படி என்னதான் இருக்கு என்று அத்தனை சின்ன வயசிலேயே என்னை எரிச்சல்பட வைத்தவர் அசாமி.ஒரு காலத்தில் நமக்கு வில்லனாய் இருந்ததால் இன்னிக்கு ஒரு வஞ்சப்புகழ்ச்சிப் பதிவு.

பொண்ணுக எப்ப பாரு அவனைப்பத்தியே பேசிக்கிட்டு…குமுதத்தில் ஒரு பேட்டியில் காலேஜ் பெண்கள் ‘கடவுள் நேரில் வந்தால்?’ என்றதுக்கு பதிலாக ‘எல்லா ஆண்களையும் அரவிந்தசாமி மாதிரி மாத்திவிடச் சொல்வோம்’ என்றார்கள் கோரஸாய். (கீழே உள்ள ஃபோட்டோவை  உடனே பார்க்கவேண்டாம் மெதுவாகப் பார்க்கவும்…)

‘பம்பாய்’ படம் வந்ததும் எங்கேயோ போனார். அப்படி ஒரு புகழ் கமலுக்குப் பின் இவருக்குத்தான் வந்தது.(கார்த்திக்கையும் சேர்ப்பார்கள் சிலர்). ஒரு வருஷத்துக்கு முன்பு கூட பெங்களூரில் ஒரு வட இந்தியன் என்னிடம் 'அதெப்படி அரவிந்தசாமி மட்டும் அப்படி ஒரு கலரில் ஸ்மார்ட்டாய் மதறாசிலேர்ந்து?' என்றான். பின்னர் என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டான்.

அடிப்படையில் அவர் ஒரு பிஸினெஸ்மேன். அவர் ஆர்வம் அதிலேதான். அதனால்தான் சினிமாவில் அப்படி ஒரு புகழ் வந்தும் அதைத் தக்க வைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் விட்டேத்தியாய் அது ஒரு பொழுதுபோக்கு என்கிறமாதிரி சினிமாவை விட்டு விட்டுப் போகமுடிந்தது. இன்னொன்று இவர் action hero ஆகவெல்லாம் நடிக்கவில்லை. அதில் புகழ்பெற்றிருந்தால்தான் நீண்ட காலத்துக்கு வண்டி ஓட்ட முடியும் தமிழ் சினிமாவில்.
(டெல்லி குமார்)
அவர் வாழ்வில் சோகங்களும்,கோபங்களும் உண்டு என்று கேள்விப்பட்டதுண்டு. டி.வி. சீரியலில் நடிக்கிற ('மெட்டிஒலி' சீரியலில் ஐந்து பெண்களுக்கு அப்பாவாக புழிஞ்சு புழிஞ்சு அழுவாரே!  -யம்மாடி...என்னால அஞ்சு பொண்ணுங்களை பெத்துக்கத்தான் முடிஞ்சது...!-'ரொம்ப கஸ்டப்பட்டிருக்காரு!') டெல்லி குமார்தான் இவரது பெற்ற அப்பா. ஆனால் இரணடு பேரும் சொல்லிக் கொள்வதில்லை. ஒரு தடவை கேட்டதுக்கு நிருபரிடம் ‘அதெல்லாம் இல்லை. என் அப்பா செத்துப் போயிட்டார்’ என்றார் அ.சாமி கோபமாக. செத்துப் போனதாக சொன்னது வளர்ப்பு அப்பாவை. சின்ன வயசிலேயே தத்துக் கொடுத்துவிட்டார்களாம்.

(ஹா...ஹா....ஹா....கடவுள் இருக்கான்டா கொமாரு! எத்தனை ஆம்பளைங்க வயத்தெரிச்சலோ!)

காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் அ.சாமி. மனைவி நல்ல தோழியா இருக்கணும் என்று சினிமாக்கள் வந்த நாட்களில் அப்படி எல்லாம் இல்லை. ஒரு பொண்ணு ஃப்ரெண்ட்லியா இருந்தா லவ் வராது என்று ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.

அதிரடியாக பேசுவதில் அஜீத்துக்கு முன்னே இவர்தான். சினிமாவில் இருக்கிற ஃபார்மாலிட்டீஸ் ஒத்து வராத மனுஷன். ஒருமுறை இளையராஜா ரெக்கார்டிங்கிற்கு வருகிறார்…இதோ வந்து விட்டார்…வந்தே விட்டார்…என்றதும் அனைவரும் அட்டேன்ஷனில் நிற்க, இவர் கையில் இருந்த சிகரெட்டை ஒரு இழு இழுத்து தூக்கிபோட்டுவிட்டு இளையராஜாவிடம் வணக்கம் சொன்னாராம்!

அண்மையில் விவாகரத்தும் வாங்கிவிட்டார் மனைவி காயத்ரியிடமிருந்து. ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனியோ இல்லை பி.பி.ஓ கம்பெனியோ ஆரம்பித்து அதை விற்றும் விட்டார்.பிஸினஸ்..பிஸினஸ்…எப்போதும் பிஸினஸ் தான்.

இப்போ என்ன அவருக்கு என்கிறீர்களா?

இப்போது மணிரத்னத்தின் புதுப்படத்தில் நடிக்கப் போகிறார். நிச்சயம் கதாநாயகனாக அல்ல. ஏதோ ஒரு அப்பா கேரக்டராக இருக்கும். இன்னொரு படத்தில் வில்லனாகவும் நடிக்கப்போகிறாராம். நாப்பத்தாறு வயதாகிறது. பார்த்தால் சவுகார்பேட்டை சேட்டு மாதிரி இருக்கிறார். தலையில் இருக்கும் கொஞ்சம் முடியில் செம்பட்டை அடித்தால் ‘சமோசாவும் ஜிலேபியும்’ விற்கிற கடையின் வடக்கிந்தியக்கார ஓனர் மாதிரியும் தோன்றுவார்.

இவர் படத்தில் எனக்குப் பிடித்தது புதையல் என்ற படம். கொஞ்சம் வித்தியாசமான நடிப்பு அவருது இந்த படத்தில். பிடிக்காதது தாலாட்டு என்ற படம். இதில் முன்னது டி.வியில் நன்றாக ஓடியது. பின்னது தியேட்டரில் ஓடியது. இதையெல்லாம் பார்க்கும்போது கமலஹாசன் பிரமிக்கவைக்கிறார்.

இன்னும் தன் உடம்பை பார்த்துக் கொண்டு, மார்க்கெட்டை நிறுத்த தேவையான புத்தியை தீட்டிக்கொண்டு,புதிது புதிதாக சிட்டுக்களை ஜோடி சேர்த்துக் கொண்டு, அவர் முதல் கல்யாணம் பண்ணிய காலகட்டத்தில் பிறந்த குழந்தையுடன் இப்போ ஜோடியாக நடித்துக் கொண்டு, ஓடிக் கொண்டே இருப்பதில் சகலகலா வல்லவன்தான்.

No comments:

Post a Comment