Monday, July 16, 2012

ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!

courtesy : bala ganesh


லைப்பைப் படிச்சதும் எங்க ‘ரஜினியும், நானும்’ன்னு எழுதி, சூப்பர்ஸ்டாரும் என் நண்பர்ன்னு சொல்லிடுவேனோன்னு பயந்துட்டீங்கதானே...! இல்லீங்க. அதுல ஒரு விஷயம் என்னன்னா... ரஜினிகாந்த்தை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆனா பாவம்... அவருக்குத் தான் என்னைத் தெரியாது. ஹி... ஹி....

1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன். உங்களுக்கு ரஜினியைப் பிடிக்கும், தொடர்ந்து படிக்க விருப்பம்னா இன்னும் சில பகுதிகள் வெளியிட உத்தேசம்!

இப்போ... உங்ககூட இன்றைய சூப்பர் ஸ்டாரான அன்றைய ரஜினிகாந்த் பேசுகிறார்:

நான் முதன்முதலா நடிச்ச ‘அபூர்வ ராகங்கள்’ படம் ஒரு வருஷம், ஒண்ணரை வருஷம் கழிச்சுத்தான் ‌பெங்களூர் பக்கம் வரும். நண்பர்கள்கிட்ட கொஞ்சம் ‘ரீல்’ விடலாம்னு நினைச்சேன்.

எனக்கு ஒரு கெட்ட பழக்கம். தெரிந்த விஷயத்தைக் கொஞ்சம் எக்ஸாஜரேட் பண்ணிச் சொல்லுவது. எதுக்குன்னா Only to attract, not to cheat them.

‘‘படத்தில் முதல்ல இருந்து கடைசி வரை நான்தான் First Hero’’ன்னு அங்க உள்ளவங்களை ‘ப்ளீஸ்’ பண்ணுவதற்காகச் ‌சொன்னேன். என்னுடைய துரதிர்ஷ்டம், ‘அபூர்வ ராகங்கள்’ படத்தை சீக்கிரமா ரிலீஸ் பண்ணிட்டாங்க. நண்பர்களுக்கு ஆர்வம், பரபரப்பு! ‌எனக்கோ பயம், தர்ம சங்கடம்!

என்னை வரவேற்க ஏற்பாடுகள் நடந்தது. எப்படி? பலூன்களோட... மிட்டாய்களோட...

திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஒண்ணா, ரெண்டா... நாலு டிசைன்ஸ்! ஒரு டிசைன்லகூட என் படம் இல்லை. சொல்லியிருக்கிறதோ மெயின் ரோலு - போஸ்டரிலோ முகம் இல்லை. அங்க மறுபடி ஒரு ‘ரீல்’ விட்டேன். ‘‘நட்சத்திரம்னாதான் போஸ்டர்ல போடுவாங்க. புதுமுகத்தை எப்படிப் போடுவாங்க?’’ -அப்படி ஒரு சமாளிப்பு.

ரிலீஸ் தேதி வந்தது. தியேட்டருக்குப் போனாங்க. அங்க வைச்சிருக்கிற போட்டோ கார்டில தேடினாங்க. ஒரே ஒரு போட்டோவில்தான் நான் இருந்தேன்- அதுவும் அவங்க கண்ணில படலை. தியேட்டரில் உட்கார்ந்தாங்க. எப்படி..? பலூனை ஊதிக் கையில வைச்சிக்கிட்டு... நான் திரையில் வந்தவுடன் அதை அடிச்சி, உடைச்சி என்னை வரவேற்க! முதலிலேயே ஸ்வீட் கொடுக்கப்பட்டு விட்டது- பால்கனியில இருககிறவங்களுக்கு. என்னன்னு சொல்லிக்கிட்டு..? ‘‘இந்தப் படத்தில் வர்ற ஹீரோ நம்ம ஃபிரண்டுதான்’’னு...!


படம் ஆரம்பமானது. ‘சிவாஜிராவைக் காணுமே...?’ டைட்டிலில் தேடுறாங்க. அங்க ரஜினிகாந்த்துன்னு இருக்கிறது அவங்களுக்குத் தெரியாது. ‘வருவான், வருவான்’னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க- அடிக்கிறதுக்கு. (பலூனை!)

படம் ஓடிக்கிட்டே இருக்கு. பலூன் காத்தும் போயிகிட்டே இருக்கு. நான் திரையில் வரவே இல்லை. இன்டர்வல் வந்திடுச்சி. வெளியே வந்தாங்க. நான் அப்ப அங்கே இல்லே. பெல் அடிச்சது. உள்ளே போனாங்க. திட்டவட்டமான முடிவு பண்ணிட்டாங்க- ‘நான் படத்திலே இல்‌லே’ன்னு! ஆனா படம் நல்லா இருக்கு, பாத்திட்டுப் ‌போகலாம்னு உட்கார்ந்தாங்க. இப்ப காத்துப் போன பலூன் ஜோபியில இருக்கு. நான் ‘ரீல்’ விட்டது தெரிஞ்சு போச்சு.

இன்டர்வெல் முடிந்து படம் ஆரம்பமானது. அப்போது திரையில்... இரண்டு கேட்டையும் தள்‌ளித் திறந்து்கிட்டு ஒருவன் வந்து நின்னான்.ந லோ ஆங்கிளில் ஷாட் (Low Angle Shot). எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தாங்க. எங்கோ பார்த்த முகம் மாதிரி இருந்தது அவங்களுக்கு. கொஞ்சம் நேரம் கழிஞ்ச பிறகு அந்த மனிதன்தான் நான்னு தெரிஞ்சது. எடுத்தாங்க ஜோபில இருந்த பலூனை... ஊதினாங்க காத்தை... அடிச்சாங்க பலூனை..! ‘டப்... டப்... டப்...’

அப்ப திரையில கமலஹாசன் முகம் வந்திருந்தது. கமலோட வரவுக்குக் காத்திரந்து சரியாக, அவுங்க அடிச்சது போல் இருந்தது. எல்லாருக்கும் ஆச்சரியம்... ‘என்னடா கமலஹாசனுக்கு இப்ப பலூனை உடைச்சி வரவேற்கறாங்களே’ன்னு..! அவுங்களுக்கு எப்படித் தெரியும்... எனக்காக அடிச்சாங்கன்னு!

படம் முடிஞ்சது. வீட்டுக்கு வந்தாங்க- என்னை அடிக்க! நான் அங்க இல்லே... ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன்- மெட்ராஸுக்கு வருவதற்கு!

No comments:

Post a Comment