Wednesday, July 18, 2012

ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்! - 3


1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.


ந்திரப்பா!

ஆளு சிகப்பு. ஒரு முறை பார்த்தா மறுபடியும் பார்க்கணும்னு தோணும். ஒரு தடவை அவரோடப் பேசினா இன்னொரு தடவை பேசணும்னு தோணும். அது என்ன கவர்ச்சியோ தெரியாது..!

ராமகிருஷ்ண பரமஹம்சரோட பக்தர். வயது 48. எனக்கும் அவருக்கும் ஒரு ஆறு வருஷ பந்தம். ஆமா! நான் வேலை செய்யற பஸ்ஸிலேதான் அவரை முதல் தடவையாகப் பார்த்தேன். ரொம்ப எக்கச்சககமான சந்திப்பு!

அவர் ஃபேமிலியோட வந்திருந்தார். டிக்கெட் கேட்டார். டிக்கெட்டைக் கொடுத்து என் தொழிலை ஆரம்பிச்சேன! தெரியுமே, திருடறதுதான்... அவரோ சிரிச்சுக்கிட்டே இருக்காரு. நல்ல மனிதர்னு நினைச்சேன். அவங்க கிட்டயும் டிக்கெட்டை திருப்பி வாங்கிடலாம்னு திட்டம் போட்டேன். எறங்கும்போது அவர்கிட்ட டிக்கெட்டைக் கேட்டேன். முடியாதுன்னு சொல்லலை... சிரிச்சுக்கிட்டே கொடுத்துட்டுப் ‌போனாரு. அப்புறம்தான் தெரிஞ்சுது... அவர் யாருன்னு! அவர்தான் பெங்களூர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்லே அஸிஸ்டெண்ட் சூபர்வைஸர்! அதாவது செக்கிங் அதிகாரி!

செக்கிங் இன்ஸ்பெக்டர் கிட்டயே கை வரிசை! மறுநாள் வழக்கம் போல டிப்போவுக்குப் போனேன். ஒரு செய்தி: ஏ.டி.‌எஸ். சந்திரப்பாவை டியூட்டி முடிச்சிட்டுப் போய்ப் பார்க்கணும்னு! ஒண்ணுமே புரியலை. டியூட்டி முடிச்சிட்டு அவர் ஆபீஸுக்குப் போனேன். உள்ளே போய்ப் பார்த்தா... நான் டிக்கெட்டை திருப்பி வாங்கிய அதே மனிதர்தான் இங்க ஏ.டி.எஸ். சந்திரப்பா!
இப்பவும் சிரிச்சாரு. அதே சிரிப்பு, அதே பார்வை! அந்த டிக்கெட் விவகாரம் பத்திக் கேட்பாருன்னு நினைச்சேன். கேக்கலை. காப்பி வேணுமான்னு கேட்டாரு. ஆர்டர் பண்ணினாரு. காப்பி வந்தது. சாப்பிட்டேன். ‘‘போயிட்டு வர்றேன்’’ன்னு கிளம்பினேன். ‘‘சரி’’ன்னாரு. போறதுக்குக் கதவைத் திறககும் போது, ‘‘ஒரு நிமிஷம்...’’ன்னாரு.

‘‘என்ன ஸார்?’’ன்னு பயந்து வளைந்து நெளிந்து கேட்டேன். ‘‘நீ மத்தவங்களை ஏமாத்து, பரவாயில்லை. ஆனால் உன்னையே நீ ஏமாத்திக்காதே’’ன்னு சொன்னாரு. இப்பவும் எப்பவும் அந்த வார்த்தை எனக்குள்ளே சுத்திக்கிட்டே இருக்கு.

அதற்கப்புறம் நானும் அவரும் சினேகிதர்களாகி விட்டோம். நானும் அவரைப் போல ராமகிருஷ்ண பரமஹம்சரோட பக்தன்.

தீபாவளிக்கு நான் போயிருந்தபோது அவரைப் பார்த்தேன். இப்பவும் அதே சிரிப்பு, அதே பார்வை, அதே உபசரிப்பு.

ஒண்ணு கேட்டாரு - ‘‘ஒரு உதவி பண்ணுவியா?’’ன்னு. அவர் கேட்டா ஒண்ணா... ஓராயிரம் உதவி பண்ண நான் தயார். ஆனா அவருக்கு நான் என்ன உதவி பண்ண முடியும்..?  என்ன எதிர்பார்க்கிறாருன்னு தெரியல, புரியல. ஏன்னா, அவரு சொல்லலை. ‘‘நேரம் வரும் போது கேட்பேன்’’ன்னு சொன்னாரு. இது எனக்கு ஒரு பிரச்சனை. ஏன்னா இதுவரைக்கும் யார் கிட்டேயும் எதுவும் கேட்டுத் தொந்தரவு பண்ணும் பழக்கம் அவருக்குக் கிடையாது.

அது எல்லாருக்கும் தெரியும்.

என் கிட்ட மட்டும்..?

கேட்டுக்கிட்டே இருக்கேன்...
-அடுத்த பகுதியுடன் ‘ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்’ நிறைவடைகிறது.

No comments:

Post a Comment